பொய்யின் மெய் – பகுதி 2

(சோலையின் இன்னொரு பகுதியில்…)
நிலவு ஒளியை வீச…
கலவரம் நிறைந்த கண்களுடன்,
நிலவரம் அறிய அங்கு வந்தான்,
தேவாரம் என்ற இளைஞன்…
தேவாரம் பாடிக்கொண்டிருந்த
ஆசாமியை நோக்கி,
"ஏ சாமி!" என்று அழைத்தான்…
சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தான் தம்பி…
கல்லிரண்டு தொலைவில்,
பள்ளிரண்டு தெரியும்படி,
சிரித்தார் சாமி காவடியானந்தர்…

காவடியானந்தரை நோக்கி,
"சாவடியில் உள்ளீரே?
ஊருக்குள் நடந்ததை
உன்னதமாய் கேளீரோ?
பத்திரிகை தவறினையே,
சித்தரித்து காட்டுகின்றேன்!
ஒப்புக்காக, செய்தியினை
தப்புத்தப்பாக அச்சடித்தான்…
ஒப்புக்கொள்ள முடியுமா,
தம்பி செய்த தவறினை?"
என்று சினந்தான் தேவாரம்…

"தப்பென்ன செய்தான்,
அப்பாவித் தம்பி…
தவறாக அடித்ததும்,
சரியாகிப் போனதே…
திட்டாதே அவனை…
தட்டிக்கொடு மாறாக…" என்று
புனைந்தார் சாமி…
புரியாது விழித்தான் – உண்மை
அறியாத தேவாரம்…
"உறக்கத்தில் உரைத்தீரோ?
துறவியே சொல்லுங்கள்…
தப்புத் தாளம் செய்தவனுக்கு,
வக்காளத்து வாங்குகிறீர்களா?"
வக்கிரமாய் கேட்டான் தேவாரம்…

ஆத்திரக் காரனுக்கு
புத்தி மட்டு…
தெரிந்து கொள்
புரியாத நண்பா…
காரணம் எதுவும் இன்றி,
தோரணம கட்ட மாட்டேன் நான்…
மணமகன் மனியரசுக்கு, உண்மையிலேயே
உடலில் பல பிணியுண்டு…
மணமகள் விசாலத்திற்கு,
இப்படியோர் விவாகத்தில்,
இஷ்டமென்பது சிறிதுமின்றி,
கஷ்டத்தோடு விவாதித்தாள்…எனவே
விசாரம் என்றச்சடித்ததும் சரியே…

காமாலை உள்ள மணியரசுக்கு
மணமாலை அணிவிக்கலாமா?
காசுமாலை என்பது,
காமாலை ஆனதும் சரியே…
திருமணத் தேதியன்று
ஓதியது வேதமா?
அனைத்தும் வெறும் பேதம் தான்… – எனவே,
வேதம் அத்தனையும்
பேதம் என்பதில் தவறில்லை…
மொய் எழுதியவர்கள்,
பொய் தான் எழுதினார்கள் – எனவே,
மொய் என்ற சொல்,
பொய் ஆனதில் பொய்யில்லை…

"இப்படியோர் செய்தியையா நீ
அப்பட்டம் என்றாய்?" என்று,
அசத்தினார் சாமி…
குறுக்கிட்டு பேசினான்
கண்விரித்த தேவாரம்…
"தவறு செய்தது,
தங்களது பெயரிலும் தானே?
மறந்துவிட்டீரோ?" என்று
மறுகேள்வியிட்டான் தேவாரம்…
"அச்செய்தி ஒன்றுதான்,
அவன் செய்த தவறு."
என்றார் சினத்துடன் சாமி…

நள்ளிரவு வேளை…
கிள்ளைகளின் ஓசை…
மரக்கிளைகளில் இருந்து,
மனம் குளிர, காதில் விழுகையில்,
பெண்ணொருத்தி வந்தாள்,
சாமியிடம் சென்றாள்…
"கூடி இருந்ததற்கு,
கூலி தரவில்லை நீ"…
என்று கூவினாள் சாமியிடம்…
திருநீறு பொட்டலத்தை
தலைகீழாக கொட்டினார் சாமி…
சிதறிய சில்லறைகளை எடுத்துச்
சிட்டிடம் கொடுத்தார் சாமி…

தவறு செய்த தம்பி,
எவரும் இல்லை காப்பாற்ற
என்று எண்ணியபோது,
எண்ணற்ற செய்திகள்
எட்டியது அவன் செவிக்கு…
அச்சத்தோடு இருந்தவன் – மகிழ்ச்சியின்
உச்சத்தில் இருந்தான்…
படுத்திறந்த இடத்திலிருந்து
விடுவிடுவென எழுந்து,
சாமியை நோக்கி, "நீ
காமி சாவடியானந்தனே தான்.
அச்சடித்ததில் தவறில்லை,
அச்சமில்லை எனக்கு" என்றவாறு,
பணப்பையை பிடுங்கினான் தம்பி…
பிணமாய் போனான் சாமி…
வேலையை திரும்பப்பெற்று,
வீட்டுக்கு திரும்பினான்,
வித்தியாசமான தம்பியாய்…

பொய்யின் மெய் – பகுதி 1

கண்மூடி நடக்கிறவன்
மண்மீதில் விழுகின்றான்
அதிசயம் பாருங்கள்
அடியேதும் படாமல் – பூமியின்
அடியிலிருந்து புதையல் கிடைத்தாற்போல
ஆதியில் அவன் செய்த தவறு
அத்தனையும் உண்மையாகி
பித்தனையும் சிரிக்க வைக்கும்
ரத்தினமாய் மாறியது…

ஆஞ்சநேய பதிப்பகமானது
பஞ்சரத்ன புரத்தில்
அஞ்சாவது தெருவில்

அமைக்கப் பட்டுள்ளது…
பொறுப்பாசிரியர் இளங்கோவடிகள்
பொறுப்பில்லா ஆசாமி…
பத்திரிக்கை – அதனுடைய
பெயர்தான் எத்தனை முக்கியம்?
"மகாபாரதம்" என்ற பெயரோடு
வெளியாகும் பத்திரிகை
ஒளிவீசும் பத்திரிகை
அப்படியோர் பத்திரிகையின்
அச்சாள் ஒரு தம்பி
அவர்தான் – தம்பி முதலியார்

பத்திரிகையின் விற்பனை
கற்பனை ஆனபோது…
அச்சடிக்கும் பணியொன்று
அச்சத்துக்கு வந்தது…
இச்சகத்தில் ஒருவனே ஆனதால்,
உற்சாகத்தோடு பணியேற்றார் தம்பி…
கன்னிகாதான பத்திரிகையில்
எண்ணிகையிலாத தவறுகளை
தம்பி செய்துவிட
வெம்பிய இளங்கோ,
பொறிந்தார் சினத்தோடு
தவறு செய்த தம்பியை நோக்கி…

தம்பி கேட்ட பரிகாரத்தை,
மறுத்துவிட்டு கடிகாரத்தை
காட்டி ஐந்தொரு நிமிடத்தில்
கண்ணெதிரில் நிற்காது
கலைந்துவிடச் சொன்னார்,
சினம் கொண்ட இளங்கோ…
மனம் நொந்த தம்பி,
மறைவிடத்தில் தங்கினான்…

கதிரவன் மறைந்ததும் – வேறு
கதியின்றி வீடடைந்தான் தம்பி…
உணவு பரிமாறிய மனைவிக்கு,
கணவனின் வேலை அக் –
கணத்தோடு முடிந்தது என்பது,
காதில் விழுந்தவுடன்,
கோபம் கிளரப்பட்டது அவளுக்கு.
வாசல் கதை திறந்து,
காது கிழியும்படி
கத்தினாள் கடுமையாய்…
"வேலையில்லாமல்  திரும்பாதீர்…அதுவரை,
"வேலாத்தாள் என்றென்னை அழைக்காதீர்…"
என்று தன் கணவனிடம்,
எரிமலையாய் பொறிந்து
சூலத்தின் மீது ஆணையிட்டதன்
மூலம், கணவனை வெளியேற்றினாள்.

மாலை மறைந்தது…
சோலை இருண்டது…
வேலையில்லாத் தம்பி
ஆலத்தின் கீழ் படுத்தான்…
தான் தெரியாது செய்த
தவறினை எண்ணினான்…
திருமணப் பத்திரிகையின்
"திரு" ஆனா மனதின்
மணியரசு என்ற பெயர்
பிணியரசு ஆனது…
மணமகளின் பெயர் விசாலம் – ஒரு
கணத்தில் ஆனது விசாரம்..
பெண்ணுக்கு அறிவித்த காசுமாலை
பத்திரிகையில் காமாலை ஆனது…

விவாகம் என்ற நிகழ்ச்சியை
விவாதமாய் மாற்றினார் தம்பி…
வேதம் என்பது,
பேதமாய் போனது…
திருமணத்திற்கு வருகை
தந்திருந்த சாமி காவடியானந்தர்
காமி சாவடியானந்தர் ஆனார்…
மொய் என்ற சொல்லில்,
"ம"கரம் "ப"கரம் ஆனது – தம்பியின்
வாழ்வு தகரம் ஆனது…
எல்லாச் சொல்லிலும்
எழுத்தொன்றில் தான் பேறு,
எனினும் கெட்டதவன் பேரு…

இவற்றையெல்லாம் எண்ணிய போது
இயற்கையாய் அவன் கண்ணிலிருந்து,
இறங்கியது கண்ணீர்…
"ஏனிந்த பிழை செய்தேன்?
நானறியேன் பராபரமே!
அதனால் உன் சித்தனாகிய
நானின்று பித்தனானேன்…
உணவு கிடைக்க வழியில்லை…
உறக்கம் என்பது வரவில்லை…
எண்ண எண்ண அழுகைதான்
எண்ணிக்கையின்றி வருகின்றது…
என்ன செய்வது நான்?
எனக்கு இது தான் விதியோ?"
என்றெல்லாம் புலம்பினான் தம்பி…

(தொடரும்…)

மதம் செய்யும் வதம்

யானையின் மதம் காட்டிற்கு அழிவு,
மனிதனின் மதம் நாட்டிற்கு அழிவு;

நீலவண்ணக் கடலே!

கடலே!
நீலவண்ணக் கடலே!
பரவி இருப்பதால் பரவை ஆனாய்
ஆழ்ந்து கிடத்தலால் ஆழி ஆனாய்
நிலம் ஒரு பங்கானால்,
நீயோ மூன்று பங்கானாய்…
நீ எங்கள் நாட்டின் முப்புறமும் இருப்பதால்
பாரதம் தீபகற்பம் ஆனது
எல்லை இலாத பெருங்கடலே
அல்லும் பகலும் அலைகின்றாயே
அலுப்பு என்பதை அறியாயோ நீ?
உருண்டு, திரண்டு, உயர்ந்து, தாழ்ந்து,
கரையை நோக்கி வருகின்றாய்,
ஆனால் ஏனோ மீண்டும் பின்வாங்குகின்றாய்?
நாங்கள் அஞ்சி பின் சென்றால் – நீ
எங்கள் பாதத்தை நீராடி செல்கின்றாய்.
அஞ்சினால் பணிவாயோ நீ?
மழையை தேக்கி வைப்பது நீ…
விலையற்ற முத்தளிக்கும் நீ,
ஏனோ கொந்தளிக்கிறாய்?
உன் கொந்தளிப்பு என்று அடங்கும்?
அதனால் அழிந்தன பல நகரங்கள்…
உலகை அழிப்பதா உன் நோக்கமா?
கடலே! அழித்தல் பணியை நிறுத்து…
வளம் தந்து நாட்டை வளப்படுத்து…
அப்போது உன்னை வாழ்த்துகிறேன்,
கடலே! நீ வாழ்க! என்று…

நாட்டின் கதி

பூக்கடையாய் இருந்த நம் நாடு,

சாக்கடையாய் மாறுவது காண்பீர்;

டீக்கடையாய் இருந்த கடைகள்,

தீக்கடையாய் மாறுவது காண்பீர்;

வண்டுகள் மொய்க்கின்ற பூஞ்சோலையை,

குண்டுகள் தகர்த்தெரிவதை காண்பீர்;

நாட்டில் உள்ள அமிர்தமெல்லாம்,

“கான்ட்" பீர் போல மாறுவது காண்பீர்!